×

நைனார் குப்பம் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மணல் பாதையை தார் சாலையாக மாற்ற வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

செய்யூர்: நைனார்குப்பத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் மணல் பாதையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இடைக்கழிநாடு பேரூராட்சி நைனார்குப்பத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சொந்தமான சுடுகாடு, ஆனியன்தோட்டம் தெருவில் இருந்து, 700 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதை கடந்த பல ஆண்டுகளாக மணல் சாலையாகயே காட்சியளிக்கிறது.

இதனால், இறந்தவர்களின் உடலக்ளை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் வாகனங்கள், அப்பாதையில் குவித்துள்ள மணல் குவியலில் சிக்குகின்றன. மேலும், தோளில் தூக்கி செல்பவர்கள் மணலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. அதேபோல், சுடுகாடு பகுதி அருகே விவசாயம் செய்யும் விவசாயிகள், தங்களது நிலத்துக்கு எந்த ஒரு வாகனமும் கொண்டு செல்ல முடியவில்லை.

இதையொட்டி விவசாய பொருட்கள், நெல் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு மணல் சாலையை கடந்து செல்வது சிரமமாக உள்ளது என பொதுமக்கள் புலம்புகின்றனர். சுடுகாட்டுக்கு செல்லும் மண் பாதையை அகற்றி, தார்சாலை அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், தொடர்ந்து அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்தவேளையில், பொதுமக்களுக்கு பயன்படுத்தாத பாதைகளில் தார் சாலைகள் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வதாகவும், 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தாத அதே சாலையில் புதிய சாலை அமைக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, தேவையற்ற பகுதியில் சாலை அமைப்பதை தவிர்த்துவிட்டு, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் இடைக்கழிநாடு நைனார்குப்பம் சுடுகாடு பாதையில் தார்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.'

Tags : crematorium ,tar road ,Nainar Kuppam ,
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...