×

குடியிருப்பு பகுதிகளில் 80 சதவீத வீட்டுமனைகள் அங்கீகாரம் பெற்றிருந்தால் மட்டுமே அடிப்படை வசதி மாநகராட்சி ஆணையர் தகவல்

நாகர்கோவில், பிப். 11: குடியிருப்பு பகுதிகளில்  80 சதவீத வீட்டுமனைகள் அங்கீகாரம் பெற்றிருந்தால் மட்டுமே அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கூறினார். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தேங்கும் குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது வலம்புரிவிளை உரக்கிடங்கில் குப்பைகள் கொட்ட பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதனால் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 11 நுண்ணுயிர் உரக்கிடங்கில் கையாளவேண்டிய நிலைக்கு மாநகராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.  வீடுகளில் இருந்து  வரும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வழங்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.   மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் பிரித்து வைப்பதற்கு என பிளாஸ்டிக் பக்கெட்டுகள் குடியிருப்பு நலசங்கங்கள் மூலம்  வழங்கப்பட்டு வருகிறது.  நாகர்கோவில் பிர்தௌஸியா நகர், அனிதாநகர், மீராநகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திடக்கழிவு திட்ட விழிப்புணர்வு மேலாண்மை முகாம் இளங்கடை அருகே உள்ள பிர்தௌஸியா நகர் தெற்கு புதுத்தெருவில் நடந்தது.

 நிகழ்ச்சிக்கு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அப்துல் கரீம் தலைமை வகித்தார். பொருளாளர் முகமது சாலி வரவேற்றார். முன்னாள் கவுன்சிலர் ஹாஜிபாபு, ஒருங்கிணைப்பாளர்கள் அப்துல் கபூர் ஜெய்லானி, அப்துல் கபூர், நிர்வாகிகள் வதூத், முஹமது, அன்சாரி, ஆயித், உதுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரித்து வழங்கும் வகையில் பிளாஸ்டிக் பக்கெட்டுகளை வழங்கி பேசியதாவது: வீடுகளில் சேரும் குப்பைகளை தரம்பிரித்து வழங்கவேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் இது சாத்தியமாகும். மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கப்பட்டு ஒரு கிலோ உரம் ரூ.1க்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது. மக்கா குப்பைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தமிழக அரசு தடை செய்துள்ளது. இதனால் கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும்போது கண்டிப்பாக துணி பைகளை எடுத்துச்செல்லவேண்டும்.

 பல குடியிருப்புகளில் உள்ளவர்கள் சாலைகள் சரியில்லை, சாலைகள் சீர் செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். ஒரு குடியிருப்பில் 80 சதவீதம் வீட்டுமனைகள்,  அப்ரூவல் ஆனால் மட்டுமே அந்த குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதி செய்துகொடுக்க வேண்டும் என அரசு கூறி வருகிறது. தற்போது அப்ரூவல் ஆகாத வீட்டுமனைகளுக்கு அப்ரூவல் பெறுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்ரூவல் பெற்றால், அடிப்படை வசதிகளை அரசு செய்துகொடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Commissioner ,areas ,Basic Amenities Corporation ,houses ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...