×

நாகர்கோவில் - திருநெல்வேலி என்ட் டூ என்ட் பஸ்கள் மீண்டும் கண்டக்டர்களுடன் இயக்கம் 5 நாளில் உத்தரவில் மாற்றம்

நாகர்கோவில், பிப்.11 :  தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின், கடந்த செப்டம்பரில் இருந்து படிப்படியாக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கின. தற்போது முழு அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே இடைநில்லா (என்ட் டூ என்ட் ) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 என்ட் டூ என்ட் பஸ்கள் இயங்குகின்றன. இடைநில்லா பஸ்கள் என்பதால் கண்டக்டர்கள் இன்றி இயக்கப்பட்டன.  பஸ் நிலையத்தில் வைத்தே டிக்கெட் கொடுக்கப்பட்டு விடும். ஒவ்வொரு பஸ்சிலும் (5 டிரிப்) நாள் ஒன்றுக்கு சராசரியாக ₹25 ஆயிரம் வரை வசூல் உள்ளது. முகூர்த்த நாட்கள், விழாக்காலங்களில் வருமானம் அதிகரிக்கும். கொரோனா ஊரடங்கு தளர்வு முடிந்து போக்குவரத்து தொடங்கிய பின், என்ட் டூ என்ட் பஸ்களும் கண்டக்டருடன் இயங்க தொடங்கின. இடையில் காவல்கிணறு பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 5ம்தேதி முதல் மீண்டும் என்ட் டூ என்ட் பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் இயங்க தொடங்கின. நாகர்கோவில், திருநெல்வேலி பஸ் நிலையங்களில் பஸ் புறப்படுவதற்கு முன்பே பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கண்டக்டர்கள் இறங்கினர். ஆனால் நேற்று முதல் என்ட் டூ என்ட் பஸ்கள், கண்டக்டருடன் இயங்க தொடங்கின. ஏப்ரல் மாதம் வரை கண்டக்டருடன் தான் பஸ்கள் இயங்கும் என்றும், அதன் பின்னர் கண்டக்டர் இல்லாத பஸ்களாக இயங்கும் என்றும் அதிகாரிகள் கூறினர். என்ட் டூ என்ட் பஸ்களில் தற்போது வருமானம் குறையும் நிலை உள்ளது. மேலும் டிரிப் எண்ணிக்கையும் 5 ஆக உள்ளதால், டீசல் செலவு அதிகரிக்கிறது. எனவே காவல்கிணறு சந்திப்பில் பயணிகளை ஏற்றி இறக்க வசதியாக கண்டக்டர்களுடன் என்ட் டூ என்ட் பஸ்கள் இயங்குவதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tirunelveli ,Nagercoil ,conductors ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...