சுங்கான்கடை அருகே பைக் மீது லாரி மோதி மெக்கானிக் பலி

திங்கள்சந்தை, பிப்.11 :  நாகர்கோவில்  அருகே களியங்காட்டில் நேற்று காலை பைக் மீது லாரி மோதிய விபத்தில்  மார்த்தாண்டத்தை சேர்ந்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். இந்த  விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய  நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மார்த்தாண்டம்  பம்மம் அருகே கல்லுதொட்டியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் அஜின் (26). மெக்கானிக். இவரது உறவினர் வீடு நாகர்கோவில் கோட்டாரில் உள்ளது. நேற்று முன்தினம்  அஜின் கோட்டாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று உள்ளார்.  பின்னர் நேற்று காலை பைக்கில் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.  சுங்கான்கடையை  அடுத்த களியங்காடு பகுதியில் வந்தபோது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த  லாரி, எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் அஜின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்தார்.  விபத்து காரணமாக நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும்  போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சுமார் 1 மணி நேரம் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுந்து நின்றன.  இதனால் ஒருபுறம் பார்வதிபுரம் வரையிலும், மறுபுறம் வில்லுக்குறி பாலம்  வரையிலும் வாகனங்கள் செல்ல முடியாதபடி நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே  விபத்து பற்றி அறிந்ததும் போக்குவரத்து போலீசார் மற்றும் இரணியல் போலீசார்  ஆகியோர் சம்பவ இடம் வந்தனர். தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி  விட்டனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. விபத்து தொடர்பாக இரணியல்  போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>