ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலி

திருப்பூர், பிப்.11: திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நேபால் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (32). இவரது மனைவி ஆர்த்தி (25), மகன்கள் பிரவீன் (7), அனில் (3), மகள் பிரியங்கா (4). இவர்கள் திருப்பூர், தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்தனர். சந்தோஷ் அங்குள்ள உணவகம் ஒன்றில் சைனீஸ் வகை உணவுகள் செய்யும் மாஸ்டராகவும், அதே உணவகத்தில் ஆர்த்தி சப்ளையராகவும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மூத்த மகன் பிரவீன் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் நேற்று நள்ளிரவு பிரியங்கா எவ்வித அசைவும் இன்றி படுத்திருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், பிரியங்காவையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு பிரியங்காவும் உயிரிழந்ததை உறுதிபடுத்தினர். பின்னர் 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: இறந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் முதல்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம். விசாரணையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருப்பூருக்கு வந்தது தெரியவந்தது. மற்றபடி குடும்பங்களில் வேறு பிரச்னைகள் கிடையாது. சந்தோஷ் சைனிஸ் வகை மாஸ்டராக இருப்பதால் குழந்தைகளுக்கு தினசரி சிக்கன் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை கொடுப்பது வழக்கம். எனவே குழந்தைகளுக்கு உணவே விஷமாகி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் முழு விபரம் தெரியவரும். இவ்வாறு கூறினர்.

Related Stories:

>