கலசப்பாக்கம்: வேலை முடிந்து இரவில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை, பைக்கில் ‘லிப்ட்’ கொடுத்து அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் திருவண்ணாலையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு பணி முடிந்து சுமார் 9.30 மணியளவில் பஸ்சில் வந்தார். ஊரின் சிறிது தூரத்தில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது கிராமத்திற்கு நடந்து சென்றார்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபர், பைக்கை நிறுத்தி, எந்த ஊர் செல்லவேண்டும்’ எனக்கேட்டார். அதற்கு அந்த இளம்பெண், தனது ஊரின் பெயரை கூறினார். இதனால் அந்த வாலிபர், நானும் அந்த ஊர் வழியாக செல்கிறேன். பைக்கில் வாருங்கள், ஊரில் விட்டு விடுகிறேன் எனக்கூறி அழைத்து சென்றார். சிறிது தூரம் சென்றபோது அந்த வாலிபர், போளூர்-செங்கம் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்றார். அங்கு பைக்கை நிறுத்திவிட்டு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
பின்னர் கலசப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கலசப்பாக்கம் அடுத்த மேலாரணி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்(21) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
