×

காங்கயம் அருகே சோளக்காட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

காங்கயம், பிப்.11: காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூர் குட்டப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 7ம் தேதி தொழிலாளர்கள் சோளத்தட்டு அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனித மண்டை ஓடு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் தகவலின் பேரில் காங்கயம் போலீசார் அந்த மண்டை ஓட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அருகில் உள்ள அர்ச்சுனாபுரம் சுடுகாட்டில் இருந்து ஏதேனும் நாய்கள் இழுத்து கொண்டு வந்து போட்டு இருக்கலாம் என கருதி போலீசார் அந்த மண்டை ஓட்டினை அதே சுடுகாட்டில் புதைத்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அதே தோட்டத்தில் ஒருவர் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் ஒரு ஆண் சடலம் கிடப்பதை கண்டார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அர்ச்சுனாபுரம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மண்டை ஓட்டை தோண்டி எடுத்து வந்து அழுகிய சடலத்துடன் சேர்த்து வைத்து பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது அழுகிய நிலையில் இறந்து கிடந்தவர் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கொல்லன்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட கருக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் (75) என்பது தெரிய வந்தது. முதியவர் வடிவேல் கடந்த மாதம் 14ம் தேதி முதல் ஊரில் இருந்து காணாமல் போய் விட்டார். அவர் காணாமல் போன நாளன்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் சட்டை வழங்கி உள்ளார். அழுகிய நிலையில் சடலமாக கிடந்தவர் அந்த சட்டையை அணிந்து இருந்ததால் இறந்தவர் வடிவேல்தான் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.  இறந்து கிடந்தவர் வடிவேல்தானா? எதற்கு அங்கு வந்தார்?, எப்படி வந்தார்?, எதனால் இறந்தார்? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஆண் சடலத்தின் எலும்புகள் மட்டும் தனியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனை ஆய்வு முடிவையும், வடிவேலுவின் குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளையும் சேர்த்து பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதில் இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் இறந்தவர் முதியவர் வடிவேல்தான் என உறுதிப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : state ,Kangayam ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...