கள்ளக்குறிச்சி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராபின் (25), தனியார் கேஸ் நிறுவனத்தில் டிரைவர் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்மு (22). இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இத்தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அம்முவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தனது அக்கா கணவருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்தோணி ராபின் தனது மனைவியை கண்டித்துள்ளார். சமீபகாலமாக தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் 10ம் தேதி இரவு வந்து வீட்டில் படுத்திருந்தவர் அதிகாலை (11ம் தேதி) 3.10 மணியளவில் தீக்காயங்களுடன் சத்தம் போட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தோணி ராபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் கேள்விப்பட்டு தூத்துக்குடியில் இருந்து சேலம் வந்த அந்தோணி ராபினின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து அந்தோணி ராபினின் இறப்பில் சந்தேகப்பட்டு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அவரது வீட்டின் வாசலில் நின்ற ஆணின் உடலில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்தோணி ராபின் சாவுக்கு அவரது மனைவி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த உறவினர்கள் சாவுக்கு காரணமான அம்மு மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
இதனிடையே கள்ளக்குறிச்சி போலீசார், அம்முவை நேற்று காவல் நிலையம் அழைத்துச் சென்று, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலை கண்டித்ததால் தனது கணவனை, உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் எரித்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம்: எனது அக்காவின் கணவருடன் 2 ஆண்டுகளாக எனக்கு தகாத உறவு இருந்தது. இது தெரிந்த எனது கணவர் அடிக்கடி என்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு மீண்டும் என்னிடம் இவ்விவகாரம் தொடர்பாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனது போன் பிஸியாக இருக்கும்போதெல்லாம் யாரிடம் பேசுகிறாய் என கேட்டு வம்பு இழுத்து வந்தார்.
சம்பவத்தன்றும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், என்னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் படுத்திருந்தபோது அவர் மீது வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி தீ வைக்க முயன்னேன். இதனால் சுதாரித்துக் கொண்ட கணவர், உடனே எழுந்து வீட்டைவிட்டு வெளியேறி தெரு வீதிக்கு ஓட முயன்றார். நான் அவரை விரட்டி ஓடிவந்து தீயை பற்ற வைத்தேன். பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். என்னிடம் சம்பவம் பற்றி கேட்டபோது, என் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் தீக்குளித்து விட்டதாக கூறி நாடகமாடினேன்.
இதை நம்பிய அவர்கள், உடனே கணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நானும் ஒன்றும் தெரியாததுபோல அவர்களுடன் சென்று சிகிச்சைக்கான உதவிகளை செய்தேன். இருப்பினும் எனது கணவர் இறந்து விட்டார். அவரது உறவினர்கள் என் மீது சந்தேகமடைந்து புகார் எழுப்பிய நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் நான் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து அம்முவை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
