×

போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈரான் புதிய தலைவர் ‘கோமா’ நிலையில் உள்ளாரா?: வெறும் அறிக்கை மட்டும் வந்ததால் பரபரப்பு

டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி வெளியிட்டுள்ள முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இவரது மறைவைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக கடந்த 8ம் தேதி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மொஜ்தபா கமேனி நேற்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டார். அதில், ‘எனது தந்தை மற்றும் போரில் உயிரிழந்த ஈரானியர்களின் மரணத்திற்குப் பழிவாங்கப் போகிறோம். ஹார்முஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து மூடி வைக்க வேண்டும். அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை உடனடியாக அகற்றாவிட்டால் தாக்குதல் தொடரும். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த பிப். 28ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்குக் கால்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பதவிக்கு வந்த 14 நாட்களாக அவர் பொதுவெளியில் தோன்றாததால், அவர் ஆழ்ந்த மயக்க நிலையில் (கோமா) இருக்கலாம் என்ற வதந்தியும் பரவியது. எனினும், ஈரான் அதிபரின் மகன் இதனை மறுத்துள்ளதோடு, அவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஈரானின் அரசு ஊடகங்கள் மொஜ்தபாவை ‘காயமடைந்த வீரர்’ என்று குறிப்பிட்டு வருகின்றன. இதற்கிடையில், ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் மொஜ்தபாவிற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளதால் அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் அதிகாரிகள் கூறுகையில், ‘எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடித்து எங்களது புதிய தலைவர் நாட்டைத் தொடர்ந்து வழிநடத்துவார்’ என்று தெரிவித்தனர்.

உயிருக்கு உத்தரவாதமில்லை;
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் புதிய தலைமை குறித்துக் கடும் எச்சரிக்கையை விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘அந்தத் தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் யாருடைய உயிருக்கும் என்னால் இன்சூரன்ஸ் பாலிசி வழங்க முடியாது’ என்று குறிப்பிட்டார். இதன் மூலம் மொஜ்தபா காமேனி, இஸ்ரேல் ராணுவத்தின் இலக்காகக் கருதப்படுவார் என்பதை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். மேலும் மொஜ்தபா கமேனியை ‘புரட்சிகர காவல்படையின் பொம்மை’ என்று விமர்சித்த நெதன்யாகு, இஸ்ரேலின் ‘கர்ஜிக்கும் சிங்கம்’ என்ற ராணுவ நடவடிக்கையின் தீவிரத்தால் அவர் பொதுவெளியில் முகம் காட்ட அஞ்சுகிறார் என்றும் குற்றம் சாட்டினார். ஈரானின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முறியடிப்பதுடன், அந்நாட்டு மக்கள் அங்குள்ள மதவாத ஆட்சியை உள்நாட்டிலிருந்தே கவிழ்ப்பதற்கான சூழலை உருவாக்குவதே தங்களது நீண்டகால திட்டம் என்றும் அவர் அறிவித்தார். நெதன்யாகு உரையாற்றிக் கொண்டிருந்த போதே இஸ்ரேலின் மையப்பகுதிகளில் அபாயச் சங்கொலிகள் முழங்கின. இதற்குப் பதிலடியாக மொஜ்தபா காமேனி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைப்போம்; தியாகிகளின் ரத்தத்திற்குப் பழிவாங்குவோம்’ என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Iran ,Tehran ,Mojtaba Khamenei ,Ayatollah Ali ,US ,
× RELATED ஈராக் வான்வெளியில் எரிபொருள்...