×

ஈராக் வான்வெளியில் எரிபொருள் நிரப்பும் போது அமெரிக்க விமானம் வெடித்து சிதறியதில் 6 வீரர்கள் பலி?: நடுவானில் ஈரான் ஆதரவு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல்

பாக்தாத்: ஈராக் நாட்டின் மேற்கு பகுதியில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு வீரர்கள் மாயமாகியுள்ளனர். ஈரான் நாட்டின் ஏவுகணை கட்டமைப்புகள் மற்றும் அணு ஆயுத திட்டங்களை அழிக்கும் நோக்கில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த பிப். 28ம் தேதி முதல் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் தீவிரமான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்காவின் மூன்று எப்-15 ரக போர் விமானங்கள் குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு படையினரால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த விபத்துகளில் சிக்கிய விமானிகள் அனைவரும் பாராசூட் மூலம் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்நிலையில், நேற்று அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான கே.சி-135 ஸ்டிராடோடாங்கர் என்ற எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கின் மேற்கு வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானி, துணை விமானி உட்பட மொத்தம் 6 வீரர்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபடும் இந்த ரக விமானங்களில், அவசர காலத்தில் தப்பிப்பதற்கான எஜெக்ஷன் சீட் எனப்படும் இருக்கை வசதிகள் கிடையாது. இந்த விபத்தின்போது இரண்டு விமானங்கள் வான்வழியில் ஒன்றாக பயணித்த நிலையில், ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி சிதறியது. மற்றொரு விமானம் அவசர கால எச்சரிக்கையை விடுத்தபடி இஸ்ரேல் நாட்டின் பென் குரியன் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க ராணுவ மையம், ‘இந்த விபத்து நட்பு நாடுகளின் வான் எல்லைக்குள் நடந்துள்ளது. இது எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான துப்பாக்கிச் சூடோ கிடையாது’ என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தொழில்நுட்ப கோளாறு அல்லது இரண்டு விமானங்கள் வான்வெளியில் மோதியதே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், இந்த விமானத்தை தங்களது ஆதரவு படைப்பிரிவினர் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விமானம் வீழ்ந்தது தொடர்பாக ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களின் கூட்டமைப்பான ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், ‘எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் வான் எல்லையை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்க ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்’ என்று தெரிவித்துள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் போர் மிக வேகமாக தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, ‘அமெரிக்காவை பழிவாங்குவோம்’ என உறுதிபூண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : US ,Baghdad ,US Air Force ,western Iraq ,Trump ,US government ,Iran ,
× RELATED போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள...