×

சாய ஆலைகளுக்கு துணை போகும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்.

ஈரோடு, பிப். 11:  சாய  ஆலைகளில் கழிவு நீர் வெளியேற்றுவதற்கு துணை போகும் மாசு கட்டுப்பாடு வாரிய  அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று விவசாயிகள்  வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு  வரும் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் முறையாக விதிமுறைகளை  பின்பற்றாமல் கழிவு நீரை நீர்நிலைகளில் வெளியேற்றி மாசுபடுத்தி  வருகின்றனர்.  இதை தடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கழிவு  நீர் வெளியேற்றும் ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக புகார்  எழுந்துள்ளது. இதற்காக மாதந்தோறும் லட்சக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது.  

இதனால், கழிவு நீர் வெளியேற்றும் விவகாரம் என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து  நடந்து வருகிறது. இதனிடையே கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகளின்  உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்  என்று மாவட்ட நிர்வாகம் சார்பில், பல ஆண்டுகளுக்கு முன்பு  எச்சரிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கழிவு நீர் வெளியேற்றியதாக ஒருவர் மீது  கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ள விவசாயிகள், ஆலை  அதிபர்கள் மட்டுமல்லாது அதற்கு துணை போகும் மாசு கட்டுப்பாடு வாரிய  அதிகாரிகள் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று விவசாயிகள்  வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க  தலைவர் வேலாயுதம் கூறியதாவது: சாய, தோல் தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு  நிலையம் இருந்தால், மட்டுமே மாசுகட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்குகிறது.  அவ்வாறு அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படுகின்றதா?  என்பதை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.  ஆனால், அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். கழிவு நீர்  வெளியேற்றும்
ஆலைகள் குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன்  எண்கள் வெளியிடுவது கிடையாது. புகார் மீது என்ன நடவடிக்கை என்பதும்  தெரிவிப்பது இல்லை.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல், கழிவு நீர்  வெளியேற்றுவது என்பது சாத்தியமற்றது. எனவே, கழிவு நீர் வெளியேற்றி இயற்கை  வளங்களை நாசப்படுத்தும் ஆலை உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர  வேண்டும் என்பதோடு, துணை போகும் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்தால்,  மட்டுமே இது முடிவுக்கு வரும். இவ்வாறு விவசாயிகள் கூறினர். அதிகாரிகள் உஷார்   ஈரோடு  மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஆகிய இரண்டு இடங்களில் மாவட்ட  மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகங்கள் மாவட்ட பொறியாளர் தலைமையில் செயல்பட்டு  வருகிறது. இந்த அலுவலகங்களில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் லஞ்சப்பணம்  கைமாறுவதாக புகார் உள்ளது. லஞ்ச ஒழிப்பு பிரிவு  போலீசார் ஈரோடு அலுவலகம் மீது குறி வைத்திருந்தனர். ஆனால், இதை முன்கூட்டியே  மோப்பம் பிடித்த அதிகாரிகள் உஷார் ஆகி தப்பித்துக்கொண்டனர்.

Tags : Pollution Control Board ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...