×

பவானீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை குழு ஆய்வு

சத்தியமங்கலம்,  பிப். 11:  வெள்ளப்பெருக்கில் இடிந்து விழுந்த பவானீஸ்வரர் கோயிலை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத்துறை குழுவினர் ஆய்வு செய்தனர். சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பவானீஸ்வரர்  கோயில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50க்கும்  மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இக்கோயிலுக்கு சென்று வழிபட்டு  வந்தனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பவானி ஆற்றில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கோயிலின் தெற்கு பிரகாரத்தில் உள்ள மதில்  சுவர் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து மண் அரிப்பு காரணமாக கோயிலின்  தெற்கு பிரகார சுவரும் இடிந்து விழுந்ததால், அப்பகுதியில்  வைக்கப்பட்டிருந்த 63 நாயன்மார்கள் சிலைகளும் இடிந்து சேதமடைந்தது.

தெற்கு பிரகாரம் முழுவதும் இடிந்து விழுந்ததால், பாதுகாப்பு  கருதி கோயிலில் பொது மக்கள் வழிபாட்டிற்கு தடை செய்யப்பட்டது. தற்போது, இந்து  சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் உள்ள சிறிய அறையில் பூஜைகள்  நடந்து வருகிறது.இக்கோயிலின் சுவர் இடிந்து விழுந்து சுமார் இரண்டரை ஆண்டு  காலம் ஆகியும் தெற்கு பிரகாரத்தில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை  எடுக்காமல் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக  சத்தியமங்கலம் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு  பவானி ஆற்றங்கரையில் மண் அரிப்பைத் தடுக்க 25 ஆயிரம் மணல் மூட்டைகள்  வைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கோயிலை   புனரமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது, நடவடிக்கை  எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்து சமய அறநிலைத் துறை செயற்பொறியாளர்கள் குழுவினர் நேற்று கோயிலின் தெற்கு பிரகாரத்தில் இடிந்து  விழுந்த பகுதியை பார்வையிட்டு பவானி ஆற்றங்கரையில் இருந்து கட்டுமான  பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு பணிகளை விரைந்து  முடித்து கோயில் புனரமைப்பு பணியை தொடங்க வேண்டும் என்பது சத்தியமங்கலம்  பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : inspection ,Trust Committee ,Bhavaniswarar Temple ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...