×

மலேசியாவில் கும்பலிடம் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத் தரவேண்டும்

ஈரோடு, பிப். 11:   மலேசியாவில் ஒரு கும்பல் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத் தரவேண்டும் எனக்கூறி பெற்றோர்  எஸ்பி. அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.  ஈரோடு, மோளக்கவுண்டன்பாளையம் காந்திபுரம், பாலதண்டாயுதம் தெருவை சேர்ந்தவர் உமாபாரதி. இவரது மனைவி நளினி (40). இவர்கள் ஈரோடு எஸ்பி. அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் ஈரோட்டில் உள்ள சாயப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு கவுதம் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகன் 8ம் வகுப்பு வரை படித்துள்ளான். அதன்பிறகு வெல்டிங் பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தான். இதில் சரியான வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் வெளிநாட்டிற்கு வேலைக்காக கோவையை சேர்ந்த உறவினர் ஒருவர் மூலம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி மலேசியாவில் வெல்டிங் வேலைக்கு சென்றான்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு எங்கள் மகனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு என் மகனிடம் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய எங்களது மகன் தனது செல்போன், பாஸ்போர்ட் எல்லாவற்றையும் ஒரு கும்பல் பறித்துக் கொண்டது, 8 மாதங்களாக யாரிடமும் பேச அனுமதிக்கவில்லை, ஒரு காட்டில் தன்னை மறைத்து வைத்திருக்கிறார்கள், என்னை காப்பாற்றுங்கள் என்று தெரிவித்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு எண்ணில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் மகனை அனுப்ப வேண்டும் என்றால் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். நாங்கள் அதற்கு எனது மகனை என்னிடம் பேச சொல்லுங்கள். நாங்கள் பணம் தர தயாராக இருக்கிறோம் என்று கூறினோம். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து என் மகன் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எனது மகன் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.  எனவே, தயவு செய்து எனது மகனை மலேசியாவிலிருந்து மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags : gang ,Malaysia ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....