×

வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது

ஈரோடு, பிப். 11:    பவானி தொட்டிபாளையம் ஊராட்சிமலை ரோடு கருப்புசாமி மகள் திருச்செல்வி, (37) ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் ஜோசப் தோட்டத்தில் உள்ள ஒரு லெதர் அலுவலகத்தில் இருந்து கடந்த மாதம் பணி முடித்துவிட்டு இரவு வெளியே வந்தார். அப்போது, அவரது கழுத்தில் கத்தியை வைத்து ரூ.80 ஆயிரம் மதிப்பிலான எட்டோகால் பவுன் நகையை மர்ம நபர்கள் பறிக்க முயற்சித்தனர். நகையை காப்பாற்றி கொள்ள திருச்செல்வி சத்தம் போட்டார். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், அவரது நாக்கு, உதட்டை கத்தியால் அறுத்தனர். ரத்த காயம் அடைந்த திருச்செல்வி, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் செக்போஸ்ட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பைக்கில் வந்த ஐந்து பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் திருச்செல்வியிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 8 பவுன் நகையை போலீசார் மீட்டனர். விசாரணையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி நகரை சேர்ந்த டிரைவர் சாம்சன், (41), திருநெல்வேலி காந்தீஸ்வரன்புதுார் கிழக்கு வீதியை சேர்ந்த பாஸ்ட்புட் கடை உரிமையாளர் சிவன்பாண்டி, (34), திருநெல்வேலி உக்கிரன்கோட்டை கிழக்கு வீதியை சேர்ந்த முத்துபாண்டி மகன் கார்த்திக் (25), கோவை உக்கடம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த யாசின்பாபு மகன் முகமது நசீர், (28) மற்றும் திருநெல்வேலி தெற்கு வைகைகுளம் முருகன் மகன் சக்திவேல், (30). இவர்கள் மூவரும் பாஸ்ட்புட் கடையில் வேலை செய்பவர்கள் என தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...