×

சிவகாசி - வெற்றிலையூரணி இடையே பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை


சிவகாசி, பிப். 11: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதலாமாண்டு மாணவர்களுக்கும் கல்லூாிகள் திறக்கப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரும்பாலாளோர் பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்கின்றனர். வெற்றிலையூரணி, விஸ்வநத்தம் கிராம மாணவர்கள் சிவகாசியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் பஸ்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் நலன் கருதி பள்ளி நேரங்களில் இந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டும் அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. குறிப்பாக பள்ளி நேரங்களில் அரசு பஸ்கள் வருவதில்லை. வெற்றிலையூரணி-சிவகாசி வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்படாததால் தனியார் மினி பஸ்சில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். கூட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் இடம் கிடைக்காமல் படிகளில் தொங்கி கொண்டும், ஏணிப்படிகளில் தொங்கி கொண்டும் ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பள்ளி நேரங்களில் இந்த வழித்தடத்தில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,school students ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை