×

கட்டி முடித்து 3 மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராத 3 குடிநீர் ெதாட்டிகள்

வருசநாடு, பிப்.11: கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யனார் கோயில் மலைப்பகுதியில் மான்கள் அதிக அளவில் உள்ளன. மழையில்லாமல் வறட்சியான காலங்களில் அவை குடிநீர் தேடி மலையடிவாரத்தில் உள்ள தேனி-வருசநாடு சாலையை கடந்து மூலவைகை ஆறு அல்லது அருகில் உள்ள தோட்டங்களுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் மான்கள் சில நேரங்களில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து விடுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வாகனங்கள் மோதி 20 க்கும் மேற்பட்ட மான்கள் பலியாகி உள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அய்யனார்கோயில் மலைப்பகுதியில் மான்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் தொட்டிகள் அமைத்து அதில் நீர் நிரப்பி வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.     

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யனார் கோயில் மலைப்பகுதியில் 3 இடங்களில் புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி நடைபெற்றது. மேலும் தொட்டிகளில் நீர் நிரப்புவதற்காக புதிய ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட்டது. குடிநீர் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் குடிநீர் தேடி செல்லும் மான்கள் வாகனங்கள் மோதி பலியாகும் அபாயம் தொடர்ந்து வருகிறது.     இதற்கிடையே இரவு நேரங்களில் சிலர் நீர் நிரப்பப்படாத குடிநீர் தொட்டிகளை மது குடிக்கும் இடமாக சமூகவிரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அய்யனார் கோயில் மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 3 குடிநீர் தொட்டிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Tags : completion ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா