திருவொற்றியூர்: சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கரன்ட் அடுப்புகளை வாங்க கடையில் மக்கள் குவிந்து வருகின்றனர். ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளதால் சிலிண்டர் விலை மற்றும் வாகன கேஸ் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் முற்றிலுமாக கிடைக்காததால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகிறது. இதனால் அன்றாட பணிகளுக்கு செல்லும் தொழிலாளிகள், வியாபாரிகள், மானவ, மாணவிகள் என பல தரப்பினர் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு கிடைக்காமல் சிரமப்படக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்ற பயத்தில் முன்கூட்டியே சிலிண்டர்களை வாங்கி வைக்க பொதுமக்களும் வியாபாரிகளும் காலி சிலிண்டர்களை வாகனத்தில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆட்டோ கேஸ் மையத்துக்கும் அலைந்து வருகின்றனர்.
இதனிடையே கேஸ் தட்டுப்பாடு எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாத நிலையில் பொதுமக்கள் தற்போது சிலிண்டருக்கு மாற்றாக மின்சார அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக பாத்திர கடைகள் உள்பட கடைகளில் பொதுமக்கள் சென்று கரன்ட் அடுப்புகள் மற்றும் ரைஸ் குக்கர் வாங்கி வருகின்றனர். இதனால் அனைத்து எலக்ட்ரானிக் கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏற்கனவே வாங்கிவைத்திருந்த சிலிண்டர்கள் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதால் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருவொற்றியூர் எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் ஜெபர்சன் கூறுகையில், ‘’கேஸ் தட்டுப்பாடு காரணமாக இன்டக் ஷன் ஸ்டவ் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தி சமைக்கக்கூடிய ஸ்டவ் தொடர்பான பொருட்களை வாங்குவதற்கு தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். எனது ஷோ ரூமில் மாதத்துக்கு 5 முதல் 10 ஸ்டவ் மட்டுமே விற்பனை ஆகிய சூழ்நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட இண்டக்ஷன் ஸ்டவ் விற்பனையாகி வருகிறது’ என்றார்.
