×

திமுக ஆட்சி அமைந்ததும் பெரியாற்றில் 152 அடி தண்ணீர் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கம்பம்/ தேனி, பிப்.11: ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கம்பம் அரசமரம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில்தான் கம்பம் நகராட்சி புதிய கட்டிடம், போக்குவரத்து காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், உழவர் சந்தை, அரசு மருத்துவமனையில் தீக்காய கட்டிடப்பிரிவு, வெளிநோயாளிகளுக்கான கூடுதல் கட்டிடம், பெண்கள் பள்ளிக்கு ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், 3 போடி ரூபாயில் கம்பம்மெட்டு ரோடு, வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. நகரின் 33 வார்டுகளிலும் மின்மோட்டார்களுடன் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்தது அனைத்தும் திமுக ஆட்சியில் தான்.

இப்போது, பேபி அணையை பலப்படுத்தி முல்லைப்பெரியாற்றில் 152 அடி தண்ணீர் உயர்த்த வேண்டும், போடி அகல ரயில்பாதை திட்டத்தை கம்பம் வழியாக லோயர் வரை விரிவாக்கம் செய்யவேண்டும், கம்பம் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும், கம்பத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், சுருளிப்பட்டி ஆற்றில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். இவையெல்லாம் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறச்செய்து, தலைவர் தலைமையில் ஆட்சி அமைத்த உடன் செய்து தரப்படும், அந்த வாக்குறுதியை நான் உங்களுக்கு தருகிறேன். அதுபோல் தலைவர் கம்பம் தொகுதிக்கு யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும். இவ்வாறு பேசினார்.

பிரச்சாரத்தில் நகரச்  செயலாளர்கள் கம்பம் (வடக்கு) வழக்கறிஞர் துரைநெப்போலியன், (தெற்கு) சூர்யா  செல்வக்குமார், கூடலூர் நகரச்செயலாளர் லோகந்துரை தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தேனி: தேனி வடக்கு மாவட்டத்தில் நடந்த உதயநிதி பிரச்சார பயணத்தில் தேனி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சக்கரவர்த்தி, தேனி நகர திமுக பொறுப்பாளர் சூர்யாபாலமுருகன், வக்கீல் எம்.செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பரணீஸ்வரன், தர்மராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags : Stalin ,Udayanithi ,formation ,DMK ,Periyar ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...