- மானாமதுரை
- சிவகங்கை
- சிறப்புப் பிரிவு ஆய்வாளர்
- சிறப்பு
- செல்
- இன்ஸ்பெக்டர்
- ஜெயக்குமார்
- அழகர்சாமி
- Athanur
மானாமதுரை: மானாமதுரை வாலிபர் மரணம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், சிவகங்கை தனிப்பிரிவு ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் (37), ஆதனூரைச் சேர்ந்த அழகர்சாமி (34) ஆகியோரை கடந்த 5ம் தேதி இரவு அரிவாளால் வெட்டியது தொடர்பாக, கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
இதில் போலீசாரை பார்த்ததும் ஆகாஷ் டெலிசன் தப்பி ஓட முயன்று தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் தாக்கியதில் ஆகாஷ் இறந்ததாக கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மானாமதுரையில் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்து வரும் நிலையில், மறியலை கைவிட நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்ந்தது. இதனிடையே, சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் வெங்கடேஷ் பெருமாள் காத்திருப்பு பட்டியலுக்கு இன்று மாற்றப்பட்டார். மேலும், அவருக்கு பதிலாக மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக சாகுல் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.
