×

சாக்கடையால் வாழ்வாதாரம் பாதிப்பு நகராட்சியை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் அதிகாரிகள் வராததால் சமைத்து சாப்பிட்ட மக்கள்

காரைக்குடி, பிப்.11: காரைக் குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதில் செஞ்சை, கீழ ஊரணி, பள்ளிவாசல், தேவகோட்டை ரஸ்தா, பாப்பா ஊரணி, நாச்சுழியேந்தல், வைத்தியலிங்கபுரம், கணேசபுரம், சத்யாநகர் பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நடக்கிறது. இதனால் இப்பகுதிக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்கு கூட வாகனங்கள் உள்ளே வரமுடியாத அளவில் சாலைகள் முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து காரைக்குடி சாலை பாதுகாப்பு குழு சார்பில் நாற்றுநடும் போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஒவ்வொரு முறையும் உடனடியாக முடிப்பதாக உறுதி கூறும் அதிகாரிகள் பின்னர் கிடப்பில் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 4 மணி நேரத்துக்கு மேலாகியும் முறையாக பதில் கூற அதிகாரிகள் யாரும் வராததால் சமைத்து சாப்பிடும் போராட்டமாக மாற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி சபாபதி, தாசில்தார் ஆனந்த், இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், நெடுஞ்சாலைத் துறை உதவிபொறியாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய உதவிபொறியாளர் ஜான்சிராணி, நகராட்சி மேலாளர் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் செஞ்சை சாலை ஒரு மாதத்தில் முடிக்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை சார்பில் உறுதியளித்து கடிதம் அளிக்கப்பட்டது. ரஸ்தா சாலை 15 நாட்களுக்குள்ளும், வ.உ.சி சாலை மார்ச் 17க்குள் முடிப்பதாக உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...