×

சட்டமன்ற தேர்தலையொட்டி புகார் அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்

சிவகங்கை, பிப்.11: சட்டமன்ற தேர்தலையொட்டி ஏற்கனவே புகாருக்குறிய அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலையொட்டி போலீஸ், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். போலீசில் எஸ்ஐக்களில் இருந்து உயர் அதிகாரிகள் வரை சொந்த மாவட்டத்தில் பணியாற்றக் கூடாது என்ற அடிப்படையில் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுபோல் பிற துறைகளில் வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித் துறை, சமூக நலம், கல்வித்துறை என தேர்தலோடு தொடர்புடைய பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களும் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். பல்வேறு துறைகளில் உயர் அலுவலர்கள் சிலர் நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடக் கூடியவர்கள் ஏற்கனவே ஆளும் கட்சியுடன் நெருக்கமாக இருந்து புகாருக்கு உள்ளான அரசு அலுவலர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் கூறியதாவது, ‘ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டு, ஏற்கனவே புகாருக்கு உள்ளானவர்களை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். அவர்களை இடமாற்றம் செய்து தேர்தல் தொடர்பில்லாத பிற பணிகளை வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில் உயர் அலுவலர்கள் இரண்டு ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தாலே அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டு நிறைவடைய சில நாள்கள் அல்லது சில மாதங்கள் இருக்கிறது எனக்கூறி இடமாற்றம் செய்யாமல் இருக்கக் கூடாது. தேர்தலோடு தொடர்புடைய துறைகளில் நீண்டகாலமாக பணிபுரியும் அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்து எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : parties ,government officials ,assembly elections ,run-up ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...