×

மானாமதுரை பகுதியில் ரோடுகளில் மணல் குவியலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

மானாமதுரை,பிப்.11: மானாமதுரை மெயின் ரோட்டில் அள்ளப்படாமல் இருக்கும் புழுதி மண்ணால் தூசி எழுந்து வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது. விபத்து ஏற்படும் முன் ரோட்டில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரையில் சிவகங்கை மெயின்ரோடு, குண்டுராயர் வீதி, பட்டரை தெரு, வாரச்சந்தை வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகளில் எடுத்து செல்லப்படும் எம்சாண்ட், சவடு மண், கிராவல் மண் ரோடுகளில் சிதறும்போது அவை புழுதி மண்ணாகி ரோடு முழுவதும் குவிந்துள்ளன. நல்ல மழை பெய்தால் ரோடுகளில் குவிந்துள்ள புழுதி மணல் குவியலாக மாறியுள்ளது.

கடந்த மாதம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்தது போலவே மானாமதுரையில் பெரிய அளவில் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மேட்டுபகுதிகளில் இருந்து பள்ளமான பகுதிகளுக்கு மணல் குவியல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மானாமதுரையில் காற்று பலமாக வீசுவதால் வாகனங்களில் செல்வோர் கண்களில் தூசி, புழுதி மண் பறந்து கண்களை பாதிப்பதுடன் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
சிவகங்கை சரவணன் கூறுகையில், ‘‘மானாமதுரை வாரச்சந்தை ரோடு, காந்தி சிலை, தேவர்சிலை, குண்டுராயர் வீதி, வைகை மேம்பாலம், அண்ணாசிலை, புது பஸ் ஸ்டாண்டு நுழையும் வழி, மதுரை மண்டபம் மெயின் ரோடுகளின் இருபுறமும் மணல் குவியல் அதிகரித்துள்ளது.

தற்போது காற்று அதிகம் வீசுவதால் தூசிப்புயல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது. இதனால் கண்களை முழுமையாக திறந்து பார்த்து வாகனங்களை இயக்க முடியவில்லை. சிவகங்கை மெயின் ரோட்டில் காந்தி சிலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, சாஸ்தா நகர், கல்குறிச்சி வரை உள்ள மெயின் ரோட்டு பகுதிகளில் இருபுறமும் மணல் குவியல் அதிகரித்துள்ளது. இந்த ரோட்டில் தான் தனியார் உயர்நிலைப் பள்ளியும், அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. மாணவர்கள் இந்த ரோட்டில் சைக்கிளில் செல்லும்போது மணல் குவியலால் நிலை தடுமாறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் புதுபஸ் ஸ்டாண்டு நுழைவுப் பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகள் செய்யும் நிறுவனம் கொட்டியுள்ள சாலைக் கழிவுகள் மணல் குவியலாக மாறி வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் மணல் குவியலை அகற்ற முன்வர வேண்டும் என்றார்.

Tags : accidents ,area ,Manamadurai ,roads ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...