சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரம் பரமக்குடி டிஎஸ்பி விநியோகம்

பரமக்குடி, பிப்.11:  பரமக்குடியில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை டிஎஸ்பி வேல்முருகன் பொதுமக்களிடம் வழங்கினார். பரமக்குடி பேருந்து நிலையத்தில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு,  மாவட்ட காவல்துறை, பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்றம், இதய நிறைவு தியான பயிற்சி கூடம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, டிஎஸ்பி வேல்முருகன் துவக்கி வைத்தார். பரமக்குடி அரசு போக்குவரத்து கழக டிப்போ மேலாளர் பத்மகுமார், இதயநிறைவு தியான பயிற்சியின் நிர்வாகி கண்ணன் முன்னிலை வகித்தனர். பேருந்து நிலையத்தில் பயணிகள், வாகன ஓட்டிகள்,மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த  தலைக் கவசம் அணிதல், பாலங்களில் முந்த வேண்டாம், குடிபோதையில் வாகனத்தை ஓட்டாதீர்கள், படியில் பயணம் நொடியில் மரணம் என விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கினார்கள். இறுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.

Related Stories:

>