×

கிருஷ்ணகிரியில் மதுரை சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் கைதான 2 பேர் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி, பிப்.11: மதுரை மாவட்டம் செக்கானூரணியை சேர்ந்தவர் ஜெயமணி (60). சமையல் மாஸ்டர். இவரது நண்பரான மதுரை மேலூர் சிட்டம்பட்டியை சேர்ந்த தேவபாண்டியன் (30) கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் திருப்பூரில் பணியாற்றியபோது நண்பர்களாகியுள்ளனர். இந்நிலையில் இருவரும் கிருஷ்ணகிரி ஜக்கப்பன்நகர் முதலாவது கிராஸில் வாடகைக்கு வீடு எடுத்து, ரகசியமாக பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்துள்ளனர்.
இங்கு நேற்று முன்தினம் மாலை டூவீலரில் வந்த 2 பேர் திடீரென வீட்டின் உள்ளே புகுந்து ஜெயமணி, தேவபாண்டியனையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் ஜெயமணி சம்பவ இடத்திலேயே பலியானார். தேவபாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், தேவபாண்டியனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தேவபாண்டியனிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பூரில் கார் டிரைவராக தேவபாண்டியன் பணியாற்றியபோது அங்கு சமையலராக பணியாற்றி வந்த ஜெயமணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நண்பர்களான இருவருக்கும் போதிய வருமானம் கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளனர். இதனால் கிருஷ்ணகிரிக்கு வந்த இருவரும் இங்கேயே கார் டிரைவர், சமையலர் பணி செய்வதாக கூறி வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
மேலும் இருவரும் சேர்ந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே பெண்களை அழைத்து வந்து விபசார தொழில் செய்து வந்துள்ளனர். இதற்காக வாலிபர்கள் பலர் அடிக்கடி அங்கு வந்து செல்வார்கள். அதேபோல, கொலையாளிகள் இருவரும் ஏற்கனவே ஜெயமணியின் வீட்டுக்கு வந்து பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

2வது முறையாக அவர்கள் போதையில் வந்தபோது ஜெயமணி, தேவபாண்டியன் ஆகியோர் பெண்களை சந்திக்க விடாமல் தடுத்து உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். அப்போது கொலையாளிகள் தடுத்த 2 பேரையும் கத்தியால் குத்திவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் துப்பு துலக்கிய போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் வந்த டூவீலரின் பதிவு எண்ணை கொண்டு அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கொலையாளிகள் கிருஷ்ணகிரி அடுத்த பில்லனகுப்பம் பகுதியை சேர்ந்த அகர்நிவாஸ் (23), குந்தாரப்பள்ளி கூட் ரோடு பகுதியை சேர்ந்த அகில் (எ) அகிலன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அதே பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

விசாரணையில் கைதான அகர் நிவாஸ், அகிலன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: விபசாரம் நடந்த வீட்டிற்கு ஏற்கனவே நாங்கள் இருவரும் சென்றுள்ளோம், மீண்டும் அங்கு வந்த போது, ஜெயமணி, தேவபாண்டியன் இருவரும் பெண்களை சந்திக்க விடாமல் எங்களை தடுத்தனர். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெமணியும், வேதபாண்டியனும் நாங்கள் மதுரைக்காரர்கள், கொலை செய்யக்கூட அஞ்சமாட்டோம் என கூறினர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த நாங்கள், ‘நீ சொல்வாய். நாங்கள் கொலையே செய்து விடுவோம்’ என கூறி கத்தியால்,ஜெயமணியை குத்தினோம். தடுத்த போது, தேவபாண்டியனுக்கு காயம் ஏற்பட்டது. இவ்வாறு தெரிவித்தனர். கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர். அதேபோல வீட்டில் இருந்த பெண்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Krishnagiri ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி