×

தைரியமா இரு… உடைஞ்சிடாதே…இதுவே என் தாரகமந்திரம்!

நன்றி குங்குமம் தோழி

“இந்தியாவில் குறிப்பாக கேரளாவிற்கு பல வெளிநாட்டினர் வர முக்கிய காரணம் அங்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள். அப்படிப்பட்ட சிகிச்சை முறைகள் தமிழ்நாட்டிலும் உள்ளது. அதில் மிகவும் முக்கியமானது நம் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட சித்த மருத்துவம்” என்கிறார் கல்பனா சிவராஜ்.சேலத்தில் சிவராஜ் சித்த மருத்துவம் என்றால் பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். ஆறாவது தலைமுறையாக இந்த சிகிச்சை முறையினை தொடர்ந்து வரும் இவர்கள் அடுத்த தலைமுறையினருக்கும் இதனை கொண்டு சென்று வருகிறார்கள். தாத்தா, அப்பா, தம்பியை தொடர்ந்து இந்த சித்த மருத்துவ சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்து வருகிறார் கல்பனா சிவராஜ்.

‘‘பெரும்பாலானவர்கள் உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை தாண்டி ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புகிறார்கள். அதில் முக்கியமானது உடல் எடை குறைப்பு, ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, மன அழுத்தம். கண்களுக்குத் தெரியாத இந்தப் பிரச்னைகளை முதலில் நீக்கினாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ரிஷி ஹெல்த் கேர்.’ இது ஒரு முழுமையான ஆரோக்கிய கூடம்.

இங்கு எடை குறைப்பு மட்டுமில்லாமல், கழுத்துவலி, மூட்டு வலி, டீடாக்சி பிகேஷன், யோகா, ஃபுட் ரிப்லெக்சாலஜி என பல சிகிச்சை முறைகள் உள்ளது. ஒருவரின் பிரச்னைக்கு ஏற்ப இரண்டு முதல் 15 நாள் வரை இங்கு தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இதனை முதலில் நாங்க ஏற்காட்டில்தான் துவங்கினோம். ஆனால், அது சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லை என்பதால், சேலத்திலும் ஒரு கிளையினை துவங்கினோம். அதற்கு முக்கிய காரணம் என் தாத்தா. அவர்தான் இந்த சிகிச்சைகள் அனைத்து மக்களுக்கும் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதன் அடிப்படையில்தான் சேலத்தில் எங்களின் சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல ஏழை எளியவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

இது எல்லோருக்கும் ஏற்ற சிகிச்சை. ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்பதான் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். உதாரணத்திற்கு ஒருவர் எடை குறைக்க வேண்டும் என்றால், அவர்கள் முதலில் செய்வது டயட் என்ற பெயரில் உணவுகளை தவிர்ப்பது. உடல் எடை கட்டுக்கோப்பாக இருப்பது அவசியம். அதற்காக உணவுகளை தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆரோக்கியமான முறையில் சுவையான உணவுகளை சாப்பிடலாம். சைவம், அசைவம், ஏன் இனிப்பு வகைகள் கூட எடுத்துக் கொள்ளலாம்.

அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று அவர்களுக்கு புரிய வைக்கிறோம். மேலும், அவர்கள் அதை வீட்டில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதையும் சொல்லித் தருகிறோம். இவை தவிர உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி, யோகா, அக்குபங்சர் என அனைத்து சிகிச்சை முறைகளும் இங்குண்டு. இதனை அவர்கள் தொடர்ந்து கடைபிடித்தால் எடை குறைவது மட்டுமில்லாமல் ஆரோக்கிய வாழ்க்கையினை வாழ முடியும். மேலும், ஸ்பா போன்ற சிகிச்சை முறைகளும் உள்ளது. இதன் மூலம் ஒருவர் முழுமையான புத்துணர்ச்சி பெற முடியும்” என்றவர், தன் தந்தை மற்றும் தம்பிக்கு பிறகு இதன் நிர்வாகத்தினை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப் பற்றி விவரித்தார்.

“எங்களுடையது ரொம்ப பழமைவாதியான குடும்பம். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க. சத்தமா சிரிச்சு பேசக்கூடாது. பள்ளிப் படிப்பை முடிச்ச கையோடு எனக்கு கல்யாணமானது. ஆனால், சில நாட்களிலேயே என் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டது. மகன் பிறந்தும் நிலைமை மாறல. அதனால் எங்க வீட்டிற்கே வந்துட்டேன். இங்கு அப்பாவுடன் சேர்ந்து நானும் மெடிக்கல் கேம்பிற்கு போவேன். சிகிச்சை மையத்தின் அட்மினிஸ்ட்ரேஷன் வேலையை பார்த்துக் கொள்வேன்.

என்னுடைய குடும்ப வாழ்க்கையில் பெரிய பிரிவு ஏற்பட்ட போது என் தம்பி சித்த மருத்துவக் கல்லூரியை துவங்கினான். அவன்தான் என்னை ஊக்கப்படுத்தினான். ‘எவ்வளவு காலம் இப்படியே இருப்ப, அதைவிட்டு வெளியே வரணும்னா நீ முதலில் வெளி உலகத்தினை எதிர்கொள்ளணும்’னு சொல்லி அந்தக் கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தான். 2015ல் கல்லூரிக்கு வந்தேன். எனக்கு கல்லூரி எப்படி இயங்கும்னு தெரியாது.

எதுவுமே புரியாது. பேராசிரியர் பால் அவர்கள்தான் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். ‘கெடாவர்’ என்றால் ‘பிணம்’ என்று எனக்கு அவர் சொல்லித்தான் தெரியும். அதன் பிறகு படிப்படியாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். சொல்லப் போனால் கல்லூரி ஆசிரியர்கள் எப்போது எந்த வகுப்பிற்கு போக வேண்டும் என்ற டைம் டேபிளை நான்தான் போடுவேன். அதன் பிறகு கல்லூரியின் முழு பொறுப்பையும் என்னிடம் என் தம்பி கொடுத்து விட்டு அவன் ஓட்டல் மற்றும் வைத்தியசாலையை பார்த்துக் கொண்டான்.

என்னைப் பொறுத்தவரை ஒழுக்கம் ரொம்ப முக்கியம். மேலும், இங்கு படிக்கும் ஐந்தரை வருஷத்தில் பாடங்களை விட செயல்முறைகள்தான் அதிகமாக இருக்கும். எங்களின் மருத்துவமனையில் நாங்க சிகிச்சை அளிக்கும் மருந்துகள் மட்டுமில்லாமல் பாரம்பரிய அரிய மருந்துகள் குறித்து அனைத்தும் நாங்க எங்களின் மாணவர்களுக்கு சொல்லித் தருகிறோம்” என்றவரின் வாழ்க்கையில் ெபரிய இடி ஒன்று விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ‘‘அந்த இழப்பு நாங்க யாருமே எதிர்பார்க்கவில்லை. முதலில் என் தந்தையை இழந்தேன். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த வருடம் அதே தினம் என் உயிருக்கு உயிரான தம்பியை இழந்தேன். என்ன செய்வதுன்னு தெரியல.

எல்லாமே இருண்டு போனது. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் பொறுப்பு என்னுடையதாக மாறியது என்ற போது பயந்து போனேன். காரணம், ஒரு பெண்ணால் அதை நிர்வகிக்க முடியவில்லை என்ற பெயர் வந்திடக்கூடாதுன்னு அச்சப்பட்டேன். அம்மாவுக்கும் அது பெரிய இழப்பு என்பதால், அவர்களிடமும் என் மனதில் ஏற்பட்ட சஞ்சலத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில் என் ஊழியர்கள் மற்றும் என் மென்டார்தான் ரொம்ப சப்போர்டிவ்வா இருந்தாங்க.

எல்லா வேலைகளையும் சென்ட்ரலைஸ் செய்து அதற்கு ஏற்ப ஆட்களை நியமித்து, அனைத்தும் என் பார்வையில் செயல்படுமாறு மாற்றி அமைத்தேன். சுல்லூரி மற்றும் ஓட்டல் ஒருபக்கம் செயல்பட மறுபக்கம் வைத்தியசாலையில் உள்ள வேலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இப்போது என் மகன் மற்றும் தம்பியின் மகன் இருவரும் நிர்வாகப் பொறுப்பினை ஏற்று வருகிறார்கள்.

எனக்கு நிறைய எதிர்கால திட்டம் இருக்கு. அதில் முதல் கட்டமாக எங்க கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு எங்களின் மருத்துவமனை மற்றும் வெல்னெஸ் மையத்தில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர துவங்கி இருக்கிறேன். அப்பாவின் மறைவிற்கு பின் வைத்திய சாலை என்னாகும் என்ற கேள்விக்கு அதை விரிவுபடுத்துவதுதான் என்னுடைய பதிலாக இருந்தது. வைத்தியசாலையை தொடர்ந்து கேட்டரிங் கல்லூரி ஆரம்பிக்க இருப்பதால், உணவகத்தினையும் விரிவுபடுத்த இருக்கிறோம். அடுத்து எங்க மருத்துவமனைக்கான மருந்தகம். அது சில காலம் இயங்காமல் இருந்தது. இப்போது அதுவும் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

ரிஷி வெல்னெஸ் மையம் உலகெங்கிலும் செயல்பட வேண்டும். இதனை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன். பெண்கள் தனிநபரா பிசினஸில் ஈடுபடும் போது தேவையற்ற நபர்களை சந்திக்க நேரிடும். அவர்களை பக்குவமாக கடந்து வரவேண்டும். என் வாழ்க்கையில் நான் சந்தித்த விஷயங்களை கடந்துதான் இந்த சாம்ராஜ்ஜியத்தினை கட்டிக் காத்து வருகிறேன். ‘தைரியமா இரு… உடைஞ்சிடாதே’ன்னு என் அம்மா சொன்ன அந்த வார்த்தைதான் இன்றும் என் மனதில் தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது’’ என்கிறார் கல்பனா.

தொகுப்பு: எஸ்.பி

Tags : India ,Kerala ,Tamil Nadu ,
× RELATED நியூஸ் பைட்ஸ்