டெல்லி : கடந்த 13 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ள ஹரிஷ் ராணா என்பவரை கருணைக் கொலை செய்ய, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் மொகாலியில் உள்ள தனது கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஹரிஷ் ராணா, அதன் பிறகு சுயநினைவின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வருகிறார். அவரது தந்தை அசோக் ராணா, தனது மகனின் துன்பத்தைப் பார்க்க முடியாமலும், சிகிச்சைக்குத் தேவையான நிதி வசதி இல்லாததாலும், மகனைத் தானாக மரணிக்க அனுமதிக்க வேண்டும் (Passive Euthanasia) என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிக்கையில், ஹரிஷ் ராணாவின் உடல் முழுவதும் படுக்கைப் புண்கள் (bed sores) அதிகமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.”இந்த அறிக்கை மிகவும் மனவேதனையை அளிக்கிறது; அந்த இளைஞரை இதே நிலையில் தொடர்ந்து இருக்க விடுவது மனிதாபிமானமற்றது,” என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹரீஷ் ராணாவின் உயிர்காக்கும் கருவிகளை அகற்றி கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது. மேலும் வீட்டில் உள்ள ஹரீஷ் ராணாவை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து ஏய்ம்ஸ் டாக்டர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றி அவருக்கு உயிர் நீக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். நீண்டகால சிகிச்சை அளித்தும் குணமடையாததால் உயிர் காக்கும் சிகிச்சையை கண்ணியமான முறையில் நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வேளையில் கடந்த 13 ஆண்டுகளாக ஹரீஷ் ராணாவை பாதுகாத்த அவரது பெற்றோருக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. அதுமட்டுமின்றி கருணை கொலை தொடர்பான சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.அதோடு, இதுபோன்ற வழக்குகள் வரும்போது கையாள நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் உயிர் நீக்க சிகிச்சை முறையில் ஒருவர் கருணை கொலை செய்யப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.
