×

கோடை சீசனையொட்டி படகுகளில் பழுதுகளை நீக்கி தயார் செய்யும் பணி துவக்கம்

ஊட்டி : கோடை சீசனையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் உள்ள படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கி தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்திற்கு பின்புறம் ஊட்டி ஏரி அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி ஆரம்ப காலத்தில் குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்பாட்டு வந்தது.

காலபோக்கில் கழிவுநீர் கலந்ததால் ஏரி நீர் மாசடைந்தது. தற்போது இந்த ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனுக்காக ஊட்டி படகு இல்லம் தயார் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை சீசனையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் உள்ள படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கி வர்ணம் தீட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

படகு இல்லத்தில் தற்போது 30க்கும் மேற்பட்ட மோட்டார் படகுகள், 80க்கும் மேற்பட்ட மிதி படகுகள், 6 துடுப்பு படகுகள் உள்ளன. பழுதான படகுகள் கரைக்கு கொண்டு வரப்பட்டு அவற்றில் ஏற்பட்டுள்ள பழுதுகள், சிறு, சிறு துளைகள் அடைக்கப்பட்டு, சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் முடிவடைந்தவுடன் அவற்றிற்கு வர்ணம் பூசப்பட உள்ளது. மேலும் மோட்டார் மற்றும் குழுவாக செல்லும் படகுகளில் மேற்கூரைகள் சரி செய்து பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர படகு இல்லத்தில் கடைக்காரர்கள் பராமரிப்பில் உள்ள சிறு சிறு பாத்திகளில் வண்ண வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோடை சீசனுக்காக ஊட்டி படகு இல்லத்தில் உள்ள படகுகள் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. சீசன் துவங்குவதற்குகள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்’’ என்றனர்.

Tags : Ooty Lake ,Ooty Central Bus Station ,
× RELATED சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5...