×

அரசு ஊழியர்கள் 9வது நாளாக சாலை மறியல் போராட்டம் தஞ்சையில் 13ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சை, பிப்.11: தஞ்சையில் வரும் 13ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 13ம் தேதி தனியார்துறை ேவலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆக்சல்ஸ் இந்தியா, டிவிஎஸ், ரெய்சிங் ஸ்டார், என்சிஆர் கார்ப்பரேசன், மிட்சுபா இந்தியா பி.லிட், எஸ்பி அப்பாரெல்ஸ், சென்னை சில்க்ஸ், ஜேபிஎம் ஆட்டோ லிட், ஐஐஎப்எம், அப்போலோ, மெட்பிளஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக டைடன் ஜூவல்லரி, யூத் 4 ஜாப்ஸ் போன்ற நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங், பி.இ. ஆகிய கல்வி தகுதிக்கேற்ப வேலை நாடுவோருக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு இடம் நிரப்பப்பட உள்ளன. இதில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கலந்து கொண்டு நர்சிங், ஐடிஐ பயின்றோர் இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஓமன் போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான ஆள் சேர்ப்பும் நடைபெற உள்ளது.

டைலரிங், பியூட்டிசியன், டிரைவிங் மற்றும் கணினி பயிற்சி உள்ளிட்ட இலவச திறன் பயிற்சிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் பயிற்சி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளுமாறும் மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித் தகுதி மற்றும் ஊதியம் ஆகிய விவரங்களை pvtjobfairtnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags : government employees ,employment camp ,Tanjore ,
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 பேருக்கு நோட்டீஸ்