×

திருவாரூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்:114 பேர் கைது பிச்சைக்காரர் வேடமிட்டு நூதன போராட்டம்

திருவாரூர், பிப்.11: திருவாரூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 9வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 114 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 18 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் மதிப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் ஆதிசேஷையா கமிட்டியினை ரத்து செய்திட வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் 9வது நாளாக நேற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் நேற்று முன்தினம் நாமம் போட்ட மண்சட்டியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பிச்சைக்காரர்கள் போல் வேடமிட்டு திருவோடு ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இணைச்செயலாளர் சுதாகர் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பிரகாஷ் மற்றும் பொறுப்பாளர்கள் மகாலிங்கம், தனபால், தட்சிணாமூர்த்தி உட்பட 114 பேர் தாலுகா போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு திருவாரூர் சன்னதி தெரு திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags : Thiruvarur ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...