×

திருவாரூர் மாவட்டத்தில் 480 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவாரூர், பிப்.11: திருவாரூர் மாவட்டத்தில் 480 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருவதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நடப்பு காரி பருவத்திற்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக 480 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதில் அரசின் உத்தரவுப்படி குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ஊக்கத்தொகையாக ரூ.70 சேர்த்து ரூ.1,958ம், பொது ரகத்திற்கு ஊக்கத்தொகையாக ரூ.50 சேர்த்து ரூ.1,918ம் கொள்முதல் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதன் நகலை கொள்முதல் நிலையங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் நெல்லுக்குரிய தொகையை தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையின் கணக்கு புத்தக நகலையும் கொள்முதல் நிலையங்களில் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்யும் நெல்லுக்கு கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் எவ்வித தொகையையும் வழங்க தேவையில்லை என்பதுடன் அலுவலர்கள் தொகை கேட்பது மற்றும் குறைபாடுகள் குறித்த புகாரினை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Opening ,Government Direct Purchasing Centers ,Thiruvarur District ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா