×

எம்எல்ஏ டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வஞ்சிக்கப்படும் விவசாயிகள்

மன்னார்குடி, பிப். 11: மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் நடந்து வரும் இன்சூரன்ஸ் கணக்கெடுப்பில் பயிர் காப்பீட்டு நிறுவனத்தினர் மற்றும் சில அரசு அதிகாரிகள் சேர்ந்துகொண்டு பல குளறுபடிகளை செய்து வருவதாக விவசாயிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். பல இடங்களில் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கும் பயிர்கள் சாய்ந்து கிடந்தாலும் அதிலிருந்து அறுவடை செய்து மாதிரிகள் எடுக்கப்பட்டு கணக்குகளில் 10 கிலோவுக்கு மேல் விளைச்சல் என பதியப்படுகிறது. விவசாயிகள் இன்சூரன்ஸ் நிறுவனத்தினால் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இடையர்நத்தம், தெற்குநத்தம், அசேஷம் தலையாமங்கலம், மூவாநல்லூர், ஆதனூர் மண்டபம் ஆகியவற்றில் உள்ள திறந்தவெளி கிடங்குகளிலும், சுந்தரகோட்டை, பாமணி ஆகிய கிடங்கு தொகுப்புகளிலும் ஏற்கனவே குறுவை நெல் பல ஆயிரம் மெட்ரிக் டன் தேங்கிக் கிடப்பது அரசு இயந்திரம் செயல்படாத நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய பணம் 48 மணி நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் விதிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. எனவே, இனியாவது அரசு இயந்திரம் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படாமல் விவசாயிகளின் பக்கம் நிற்க வேண்டும். இன்சூரன்ஸ் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு இனி வழிவகைகளை இந்த அரசு உடனடியாக செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MLA ,DRP Raja ,insurance company ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...