×

அறந்தாங்கியில் சுபமுகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பட்டுக்கோட்டை சாலை

அறந்தாங்கி, பிப். 11: அறந்தாங்கி நகரில் உள்ள முக்கிய சாலைகளுள் பட்டுக்கோட்டை சாலை மிக முக்கியமானது. அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகும். மேலும் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை, அரசு போக்குவரத்து கழக பனிமணை, முக்கிய கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் முகூர்த்த நாட்களில் வடகரை முருகன் கோயில் அருகிலும், இந்த சாலையில் ஓரம் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களிலும் திருமண விழாக்கள் நடைபெறும்போது இதில் பங்கேற்பவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முகூர்த்த நாட்களில் இந்த இடங்களை வாகனங்கள் கடந்து செல்ல 20 நிமிடங்களுக்கு மேலாகும். மேலும் அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுதவிர அவசர சிகிச்சைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் அவலம் ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருமண விழாவுக்கு வருவோர் போக்குவரத்து அதிகமுள்ள சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் பட்டுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களின் இருந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுவதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட உரிய நேரத்துக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதனால் பலமுறை ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருமண மண்டபங்களுக்கு வருவோரின் வாகனங்களை திருமண மண்டப வளாகத்தில் நிறுத்த உத்தரவிடவேண்டும்.  வடகரை முருகன் கோயிலுக்கு வருவோரை, கோயிலின் தென்கரையில் அவர்களை இறக்கி விட்டு விட்டு அருகன்குளம் பகுதியில் வாகனங்களை நிறுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பட்டுக்கோட்டை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். எனவே அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,Pattukottai ,Aranthangi ,
× RELATED பட்டுக்கோட்டையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி