×

அரியலூரில் 10 துப்புரவு பணியாளர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கல்

அரியலூர், பிப்.11: அரியலூரில் தாட்கோ மூலம் தொழில் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பருவக்கடன்களுக்கான காசோலைகளை அரசு தலைமைக்கொறடா ராஜேந்திரன் வழங்கினார். அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தாட்கோ கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு பருவக்கடன்களுக்கான காசோலைகளை அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் வழங்கினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் தேசிய துப்புரவு பணியாளர்களின் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (என்எஸ்கேஎப்டிசி) திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு பருவ கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணியாற்றி வரும் 10 துப்புரவுப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தாட்கோ மூலம் முட்டை கடை, பேன்சிஸ்டோர், டிபன் கடை உள்ளிட்ட தொழில் தொடங்குவதற்கு பருவ கடன் ரூ.90,000 மற்றும் விண்ணப்பதாரர்களின் 10 சதவீத சொந்த முதலீட்டுத் தொகை ரூ.10,000ம் சேர்த்து கூடுதல் ரூ.1,00,000 வீதம் 10,00,000 க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னூலாப்தீன், மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர், ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...