×

இரும்பு கம்பிகள் திருட்டு வழக்கு கேமரா பதிவு மூலம் விசாரணை

கொள்ளிடம், பிப்.11: கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள குடோனில் அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த 3 டன் எடையுள்ள ரூ.2 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் நேற்று முன்தினம் திருட்டு போனது. இதுகுறித்து கொள்ளிடம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைத்தில் பிடிஓ ஜான்சன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றிய அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமரா வீடியோ பதிவுகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வரும் ஒருவர் இரவு 11 மணியளவில் ஒன்றிய ஆணையர் இருக்கும் அலுவலக கதவை திறந்து உள்ளே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அவர் உள்ளே சென்றவுடன் சிசிடி கேமரா இயக்கம் நிறுத்தப்படுகிறது.

பின்னர் மீண்டும் 2 மணிக்கு கேமரா செயல்பட துவங்கியது.கேமரா இயக்கம் நிறுத்தப்பட்டு 3 மணி நேரத்தில் அங்குள்ள கம்பிகள் திருடப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக பின்புற சுற்றுச்சுவர் மேல்பகுதி வழியாக வெளியே தூக்கி எறியப்பட்டு கம்பிகள் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. இரும்பு கம்பி தரையில் இழுக்கும்போது ஏற்பட்ட கீறல் பதிவாகி உள்ளது. இந்த பதிவை வைத்து பார்க்கும்போது கம்பிகள் திருட்டு போவதற்கு அங்குள்ள ஒருவரே காரணமாக இருக்கிறார் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : theft ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது