பள்ளி மாணவி திடீர் மாயம் கடத்தலா? போலீஸ் விசாரணை

சேலம், பிப்.11: சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்-மஞ்சு தம்பதி, சீலநாயக்கன்பட்டியில் பிளே ஸ்கூல் நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் தாரிகா(14), ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பெற்றோர் பள்ளிக்கு சென்ற நிலையில், தாரிகா வீட்டில் இருந்தார். காலை 11.45 மணி அளவில், பெற்றோர் நடத்தி வரும் பள்ளிக்கு செல்வதாக பாட்டியிடம் கூறி விட்டு, தாயின் செல்போனை எடுத்துச் சென்றார். ஆனால் பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளியில் இருந்து திரும்பி வந்த பெற்றோர், மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். அவர் எடுத்துச் சென்ற செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.

பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால், டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் நேற்று மாலை புகார் செய்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அச்சிறுமி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில், செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிறுமி தாரிகாவின் புகைப்படத்துடன், அவர் காணாமல்போன விவரம் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பரவி வருகிறது. இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>