×

நீண்ட நாட்களுக்கு பிறகு சேலம் மத்திய சிறையில் செல்போன் மீட்பு: போலீஸ் விசாரணை

சேலம், பிப்.11: சேலம் மத்திய சிறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தீவிரவாத கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு செல்போன், கஞ்சா நடமாட்டம் அதிகளவில் இருந்தது. தொடர் விசாரணையில் கைதிகளுக்கு, சிறை அதிகாரிகள், வார்டர்கள் சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களை கண்டறிந்த அதிகாரிகள், அவர்களுக்கு சிறைக்கு உள்ளே பணி வழங்காமல் வெளிப்பகுதியில் பணியை வழங்கினர். இதனால் செல்போன், கஞ்சா போன்றவை முற்றிலும் தடுக்கப்பட்டது.

இந்நிலையில், நீண்ட  நாட்களுக்கு பிறகு, நேற்று சிறையில் அதிநவீன செல்போன் ஒன்று கண்டெக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று மாலை சிறையில் 7ம்பிளாக்கில் 4வது தொகுதியில் உள்ள தூண் மீது, செல்போன் இருப்பதை பார்த்த வார்டன்கள், அதனை மீட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நவீன ஆண்ராய்டு  செல்போனான அதில் சிம் இல்லை. சிறைக்குள் செல்போன் எப்படி வந்தது என்பது குறித்து சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Police investigation ,Salem Central Jail ,
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...