சேலம் மாவட்டத்தில் ‘மினி கிளினிக்’ பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு 13ம் தேதி கடைசி நாள்

சேலம், பிப்.11: சேலம் மாவட்டத்தில் மினி கிளினிக்களுக்கான மருத்துவ  பணியாளர்கள் விண்ணப்பிக்க வரும் 13ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், ெபரும்பாலான தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டன. இதனால் சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சிறு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளில் தலா ஒரு மினி கிளினிக்கு ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் வீதம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், தனியார் நிறுவனம் மூலம் நியமனம் செய்ய தடைவித்தும், மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மினி கிளினிக்குக்கு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என 321 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 13ம் தேதி கடைசி நாள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என 321 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்து வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 13ம் தேதி கடைசி நாளாகும். பின்னர், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, மாவட்ட கலெக்டர், சுகாதார பணிகள் இணை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,’’ என்றனர்.

Related Stories:

>