×

விவசாயியை வெட்டிய வழக்கில் சிஆர்பிஎப் வீரருக்கு 5 ஆண்டு சிறை: அரூர் நீதிமன்றம் தீர்ப்பு

அரூர், பிப்.11:  அரூர் அருகே விவசாயி அவரது மகனை வெட்டிய வழக்கில், சிஆர்பிஎப் வீரருக்கு 5ஆண்டு சிறை தண்டனையும், ₹30ஆயிரம் அபராதமும் விதித்து அரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கூத்தாடிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி(70), விவசாயி. இவரது மகன் சிவா(30). இருவரும் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, தங்களது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர்.

அப்போது, முன் விரோத தகராறில், பக்கத்து நிலத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரரான சக்திவேல்(36), உள்ளிட்ட 7 பேர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பொன்னுசாமி, சிவா ஆகிய இருவரையும் வெட்டியதில் படுகாயமடைந்தனர். அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, இருவரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, சக்திவேல் உள்ளிட்ட 7பேர் மீது, கொலை முயற்சி பிரிவில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்த வழக்கு அரூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு நேற்று வந்தது. சார்பு நீதிபதி முகமது அன்சாரி, சக்திவேலுக்கு, 5ஆண்டு சிறை தண்டனையும், ₹30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட பொன்னுசாமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 6பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : soldier ,CRPF ,court ,
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை