ஒரே இடத்தில் பல ஆண்டாக பணியாற்றும் அரசு அலுவலர்களை இடம் மாற்ற வேண்டும்: முன்னாள் எம்பி தாமரைச்செல்வன் அறிக்கை

தர்மபுரி, பிப்.11: தர்மபுரி முன்னாள் எம்பியும், திமுக சட்ட பாதுகாப்பு குழு மண்டல பொறுப்பாளருமான வக்கீல் தாமரைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, கனிம வளத்துறை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள், ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக தாசில்தார்கள், பிடிஓக்கள், காவல் துறையை சேர்ந்த ஒரு சிலர் ஆளும் கட்சியின் ஆதரவோடு, தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த அதிகாரிகளில் சிலர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு, பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் குறிப்பாக, திமுகவின் வெற்றியை மாற்றி அறிவிக்க காரணமாக இருந்தவர்கள்.

இவர்களை வரும் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பாகவே, வேறு மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும். இதுபோன்ற அதிகாரிகள் தொடர்ந்து அதே இடத்தில் பணியாற்ற அனுமதித்தால், சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியினர் நிர்ப்பந்தத்தின் பேரில், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து, ஒரே இடத்தில் ஓராண்டுக்கு மேலாக பணிபுரிந்து வரும் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>