மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்துக்கு தடை சாமி தரிசனத்துக்கு அனுமதி ஆட்சியர், கோயில் நிர்வாகம் அறிவிப்பால் பக்தர்கள் குழப்பம்

மேல்மலையனூர் பிப். 11:   அங்காளம்மன்கோயிலில் ஊஞ்சல் உற்சவத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அங்காளம்மனை வழிபட மாதம் தோறும் அமாவாசை தினத்தில் வருகின்றனர். மேலும், அன்றைய தினம் இரவில் நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுவர். கடந்த 10 மாதமாக கொரோனா காரணமாக கோயில் உள்ளேயே ஊஞ்சல் உற்சவம் நடந்து வந்தது. பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது சில தளர்வுகளுடன் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் அனுமதியுடன் ஊஞ்சல் உற்சவத்தை நடத்த ஆட்சியர் தடை விதித்திருந்தார். ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலில் வடக்குவாசல் எதிரே ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் வளாகம் முழுவதும் 7500 வட்டங்கள் வரைந்து பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஊஞ்சல் உற்சவத்தை காண ஏற்பாடு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை அறிவிப்பு வராத நிலையில், கோயில் நிர்வாகம் சமூக இடைவெளிக்கான வட்டம் வரைந்து இருப்பதால், பக்தர்களுக்கு அனுமதி உண்டா? இல்லையா? என்ற குழப்பம் நீடிக்கிறது.

Related Stories:

>