×

பண்ருட்டி அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் கணவரை கொல்ல மதுவில் விஷம் கலந்த மனைவி- நண்பன் பலியானது அம்பலம் சொத்து பிரச்னையால் பரிதாபம்

பண்ருட்டி, பிப். 11: பண்ருட்டி அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக மதுவில் விஷம் கலந்த நண்பனின் மனைவி கைது செய்யப்பட்டார். கணவரை கொல்வதற்காக அவர் விஷம் கலந்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன்(43), ராமலிங்கம்(55). கூலி தொழிலாளிகளான இருவரும் நண்பர்கள். கடந்த 8ம் தேதி 2 பேரும் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து குடித்துள்ளனர். அதில் மீதமிருந்த ஒரு மது பாட்டிலை ராமலிங்கம் வீட்டில் வைத்துள்ளனர். மறுநாள் காலையில் வேலைக்கு சென்ற இடத்தில், அந்த மதுபாட்டில் எங்கே என்று பாலமுருகன் கேட்டுள்ளார். அந்த பாட்டில் வீட்டில் இருப்பதாக கூறிய ராமலிங்கம் வீட்டிற்கு சென்று மதுபாட்டிலை எடுத்து வந்துள்ளார். அதில் பாதி அளவிற்கு ராமலிங்கம் குடித்து விட்டு மீதியை பாலமுருகனிடம் கொடுத்துள்ளார். மது குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். 2 பேரையும் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மதுவில் விஷம் கலந்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே பாலமுருகன் உயிரிழந்தார். ராமலிங்கம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாலமுருகன் மனைவி ஜானகி அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்கள் 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் மதுபாட்டில் வாங்கிய டாஸ்மாக் கடையிலும் சோதனை நடத்தினர்.  இதனிடையே ராமலிங்கத்தின் மனைவி ஜெயக்கொடியிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் மதுபாட்டிலில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டார்.  அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:

எனது கணவர் ராமலிங்கத்தின் முதல் மனைவி 25 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவருக்கு ஒரு மகன் உள்ளார். என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். எனது கணவர் குடும்பத்தை சரியாக கவனிப்பதில்லை. மேலும் முதல் தாரத்து மகன் மீது பாசம் காட்டி வந்தார். சொத்துக்களை மகன் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்து இருந்தார். இது சம்பந்தமாக எங்களிடையே பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டேன். எனது கணவர் மது குடிப்பது வழக்கம். இதனால் மதுவில் விஷம் கலந்துவிட எண்ணினேன். இதற்கு சரியான சந்தர்ப்பம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் எனது கணவர், இறந்து போன பாலமுருகன் மற்றும் சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து வீட்டின் முன்பு வைத்து குடித்தனர். இதில் எனது கணவர் சிறிது நேரத்திலேயே போதை அதிகமாகி மயங்கி விட்டார். ஒரு பாட்டில் மட்டும் மிச்சம் இருந்தது. அந்த பாட்டிலை ராமலிங்கத்தின் உறவினர் குணசேகரன் எங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முந்திரி மருந்தை பாட்டிலில் கலந்து வைத்துவிட்டேன். மறுநாள் காலையில் வேலைக்கு சென்ற எனது கணவர் திரும்பி வந்து விஷம் கலந்த மதுபாட்டிலை எடுத்துச் சென்றார். அதனை எனது கணவரும் பாலமுருகனும் குடித்துள்ளனர். எனது கணவரை கொல்வதற்காக விஷம் கலந்து வைத்த மதுவை குடித்ததால் பாலமுருகன் இறந்துள்ளார். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : death ,Panruti Wife ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு