×

கிரண்பேடியை திரும்பப்பெற்றால் தான் புதுவை மக்களுக்கு விடிவு காலம் ஜனாதிபதியிடம் நாராயணசாமி புகார்

புதுடெல்லி, பிப். 11: ஒரு சர்வாதிகாரி போன்று செயல்பட்டு வரும் ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற்றால் தான் புதுவை மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என முதல்வர் நாராயணசாமி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.  யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தனக்குத்தான் அதிகாரம் என கவர்னர் கிரண்பேடி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு வருவதுடன், மக்கள் நலத்திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார் என்று முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி மீது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் கிரண்பேடிக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை  முதல்வர் நாராயணசாமி நேற்று காலை 11மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து கொடுத்தார். அப்போது அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

நாராயணசாமி கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அனைத்து திட்டங்களுக்கும் எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார்.குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 10 சதவீதும் உள்இடஒதுக்கீடு, மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்து கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது போன்ற திட்டங்களுக்கு தற்போது ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து காலதாமதம் செய்து வருகிறார். தன்னிச்சையாக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். அதற்கு அவருக்கு கண்டிப்பாக அதிகாரம் கிடையாது.இதில் 21 கட்சிகள் ஒன்றிணைந்து ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக 10 நாட்கள் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. அதே போன்று இதுகுறித்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளது.  அதனையும் ஜனாதிபதியிடம் இன்று(நேற்று)கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்று விவகாரத்தில் கூட அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால், அதற்கு எதிர்வினையாக  கிரண்பேடி செயல்பட்டார். அதேப்போன்று தனக்கான பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தை வரவழைத்து நிறுத்தி வைத்துள்ளார். இதனால் அவரது மாளிகை பகுதியில் உள்ள ஒரு பூங்காவே மூடப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் வாழ்வாதாரம் அனைத்தும் பாதிப்படைகிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவு விவகாரத்தில் தலையிடக் கூடாது என நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் அதனை கிரண்பேடி மதிக்காமல் மீறி செயல்பட்டு
வருகிறார். இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். இவர் இருப்பதால் புதுவை மாநில நலத்திட்ட வளர்ச்சிகள் அனைத்தும் மக்களுக்கும் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறது. அதனால் ஒரு சர்வாதிகாரி போன்று செயல்படும் ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அப்போது தான் மாநில மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதனை பரிசீலனை செய்து முடிவு மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.

புதுவையில் எதிர்க் கட்சி தலைவர் ரங்கசாமியை பொருத்தமட்டில் தேர்தல் வரும் நேரத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பார். மற்ற நேரத்தில் எதைப்பற்றியும் கண்டு கொள்ள மாட்டார். இது மாநில வளர்ச்சிக்கு பலன் தராது. இதில் மத்திய பட்ஜெட்டில்  மாநிலம் புறக்கணிக்கப் பட்டுள்ளது என்பது சரியான ஒன்று கிடையாது.  அதேபோன்று வரும் புதுவை சட்டமன்ற தேர்தலில் பாஜ முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை அக்கட்சி தலைமை அறிவித்தால் அதனை கண்டிப்பாக வரவேற்பேன். அப்போது தான் மக்களிடம் அவருக்கு இருக்கும் நிலவரம் குறித்து வெளிப்படையாக தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மத்திய உள்துறை கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகனையும் நேற்று நேரில் சந்தித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Narayanasamy ,President ,Puthuvai ,
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..