ஏர்வாடி அருகே பூட்டிய வீட்டில் மின் சாதனங்கள் திருட்டு

களக்காடு, பிப்.11: ஏர்வாடி அருகே தளபதிசமுத்திரம் பஞ்சாயத்திற்குள்பட்ட காருண்யா நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (40). இவர் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார். இதனால் தொழில் நிமித்தமாக குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை சாந்திநகரில் குடியிருந்து வருகிறார். காருண்யா நகரில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. அவரது உறவினர் குமரேசன் அவ்வப்போது வீட்டிற்கு சென்று மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 43 இஞ்ச் எல்இடி டி.வி மற்றும் டாப் லைட்டுகளை திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். மறுநாள் காலை வீட்டிற்கு சென்ற  குமரேசன் வீடு உடைக்கப்பட்டு, திருட்டு நடந்திருப்பதை கண்டு தமிழ்செல்வனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தமிழ்செல்வன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: