×

மைத்துனரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அதிமுக பிரமுகருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

திருவொற்றியூர்: எண்ணூர் கே.வி.குப்பம் புதிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன்(40). இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.வைத்தியநாதன் திருவொற்றியூர் விம்கோ நகரில் தனது தந்தைக்கு சொந்தமான ஸ்வீட் கடையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு வைத்தியநாதனின் தங்கையின் கணவரான திருவொற்றியூர் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக மீனவரணி துணை செயலாளராக உள்ள அஞ்சப்பன்(51) வைத்தியநாதனை ஸ்வீட் கடை நடத்த விடாமல் தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் பராமரிப்பில் இருந்து வந்த கடைகளையும் அஞ்சப்பன் ஆக்கிரமித்து அதற்கான வாடகையை அவரே வசூல் செய்துள்ளார்.

இதை தட்டி கேட்ட வைத்தியநாதனை தனது உறவினர்களுடன் வந்த அஞ்சப்பன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வைத்தியநாதன் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது தனது தற்கொலைக்கு அஞ்சப்பன் தான் காரணம்  என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். மேலும் வைத்தியநாதனின் மனைவி சிவகாமியும் தன்னுடைய கணவரின் சாவுக்கு அஞ்சப்பன் தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எண்ணூர் அனல் காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

இந்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு பொன்னேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையை நேற்று முன்தினம் (9ம் தேதி) முடித்த  கூடுதல் அமர்வு நீதிபதி விஜயதாரணி, அஞ்சப்பன் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பொன்னேரி போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதிமுக மாவட்ட துணை செயலாளருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து இருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,brother-in-law ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...