நகைக்கடையில் 28 சவரன் திருடி கவரிங் நகைகளை வைத்த ஊழியர் உட்பட 3 பேர் கைது

ஆவடி: ஆவடி, சி.டி.எச் சாலை, செக்போஸ்ட் அருகே தனியார் நகை கடை உள்ளது. இங்கு அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், அடிக்கடி  ஆவடி கிளை அலுவலகத்தில் இருந்து நகைகளை வாங்கிக்கொண்டு தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி சதீஷ்குமாரிடம் 123 சவரன் நகைகளை தனித்தனியாக பாக்கெட் செய்து தி.நகர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொடுத்து அனுப்பியுள்ளனர்.  

அங்கு அவர் நகைகளை ஒப்படைத்துள்ளார். அங்குள்ள அதிகாரிகள், நகைகளை பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சோதனை செய்தபோது, அவைகளில் 28.5 சவரன் கவரிங் என தெரியவந்தது. இதுகுறித்து, அங்கிருந்து ஆவடி கிளை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலாளர் ஜெயகர் (42) கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் சதீஷ்குமார் நகைகளை திருடி கவரிங் நகைகளை வைத்தது தெரியவந்தது.  போலீசார் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை நேற்று பிடித்து விசாரித்தனர். அவர் திருடிய நகைகளை கொரட்டூரில் வசிக்கும் கள்ளக்காதலி, நண்பரிடம் கொடுத்திருப்பதாக தெரிவித்தார். தனிப்படை போலீசார் த சதீஷ்குமாரின் கள்ளக்காதலி ஷோபா (40), நண்பரான கொரட்டூர், கேஆர் நகரை சேர்ந்த ரஞ்சித் என்ற கண்ணன் (38) ஆகியோரை கைது செய்தனர்.

பூந்தமல்லி: பூந்தமல்லி, சாரதி நகரைச்சேர்ந்தவர் நூர்ஜகான் (30), இதே பகுதியில் வசிக்கும் இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்றுமுன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டார். நேற்று வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்த நூர்ஜகான், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை சோதனையிட்டனர். இதில்  மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 30 சவரன்  ரூ.1.20 லட்சம் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் இதேபோல் மர்ம நபர்கள் இந்த வீட்டின் அருகிலுள்ள மற்ற இரண்டு வீடுகளிலும் கொள்ளையடித்துள்ளனர்.

Related Stories:

>