திண்டிவனம் அருகே பயங்கரம் சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது சோகம்

திண்டிவனம், பிப். 9: திண்டிவனம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.  சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தலவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன்கள் குருநாதன்(54), சென்னை ரயில்வேயில் வேலை செய்து வந்தார். செந்தில்நாதன்(50), சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். செந்தில்நாதன் மனைவி இந்துமதி (40), சென்னை சேப்பாக்கத்தில் வேளாண் அலுவலராக இருந்து வந்தார். செந்தில்நாதன் மகன் முகில்(16), 11ம் வகுப்பு படித்து வந்தார்.   இவர்கள் சென்னை மேடவாக்கத்தில் தங்கி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 4 பேரும், நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளனர். காரை செந்தில்நாதன் ஓட்டினார். திருமண நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக நேற்று காலையில் ஒரே காரில் 4 பேர் சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

 திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குருநாதன், செந்தில்நாதன், இந்துமதி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முகிலனை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டிவனம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>