முழு குளிர்சாதன வசதியால் பயனில்லை நெல்லை- காந்திதாம் ரயிலை சாதாரண ரயிலாக இயக்க வேண்டும் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தல்

நெல்லை, பிப். 10: நெல்லை தொகுதி எம்பி ஞானதிரவியம் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நெல்லையில் இருந்து காந்திதாம் வரை செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை இயக்க உத்தரவிட்டதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நெல்லை - காந்திதாம் (வண்டி எண்.19423/19424) ஹம்சபர் ரயில் தற்போது முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் மும்பை அருகேயுள்ள பன்வெல் வழியாக இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் அதிக அளவில் உபயோகிக்க இயலாமல் உள்ளனர். ஏனெனில் தென்தமிழக மக்களில் அதிகமானோர் மும்பைக்கு வேலைவாய்ப்பிற்காக செல்வபர்கள் என்பதுடன் அனைவரும் நடுத்தர வாசிகள். இதனால் தற்போது இயக்க உத்தரவிடப்பட்டுள்ள முழுவதும் குளிரூட்டப்பட்ட ரயிலில் அதிக கட்டணம் செலுத்த  இயலாத நிலை உள்ளது. மேலும் அந்த ரயிலில் கூட்டமும், ரயில்வே துறைக்கு வருவாயும் குறைவாக உள்ளது. எனவே நெல்லை - காந்திதாம் ஹம்சபர் ரயிலை இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் கொண்ட ரயிலாக மாற்றி இயக்கினால் மும்பை செல்லும் அனைவரும் இந்த ரயிலை பயன்படுத்துவர். ரயில்வே துறைக்கு வருமானமும் அதிகம் பெருகும். எனவே அதை செயல்படுத்த வேண்டும்.

 

மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் எர்ணாகுளம்- ஓகா மற்றும் வாரம் ஒருமுறை இயக்கப்படும் மட்கான்- ஹபா, நாகர்கோவில்- காந்திதாம், திருவனந்தபுரம்- வேரவல், கொச்சுவேலி- பஹாவெல்நகர், கொச்சுவேலி- போர்பந்தர் ஆகிய ரயில்களை நெல்லையில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரயில்களை நெல்லையில் இருந்து இயக்குவதற்கு போதுமான முனைய வசதி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>