சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பணப் பலன்கள், விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தராமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்தும்;
தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் வருகிற 13ம் தேதி (வெள்ளி) பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், தலைவர் தாடி ம.ராசு, பொருளாளர் எம்.அப்துல் அமீது ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில நிர்வாகிகள், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அண்ணா தொழிற்சங்களை சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
