×

குளத்தில் மூழ்கி பலியானவர் குடும்பத்துக்கு உரிய

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அண்ணாநகர் குளத்தில் மூழ்கி பலியான முதியவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கீதாஜீவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
 தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியிலுள்ள குளத்தினை சலவைத்தொழிலாளர்கள் துணி துவைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதி தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா மற்றும் சலவை செய்வதற்கான பகுதியாக மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.  இந்நிலையில், சம்பவத்தன்று அண்ணாநகரை சேர்ந்த சலவைத்தொழிலாளி கருத்தப்பாண்டி இந்த குளத்தில் மூழ்கி பலியானார். மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிர் இழந்த முதியவர் குடும்பத்தினர் நேற்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., நேரில்சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் ஜஸ்டின் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இதன்முடிவில், உயிரிழந்த முதியவர் கருத்தபாண்டி குடும்பத்தினருக்கு உரிய நிதி உதவி வழங்கப்படும், குளத்துப்பகுதியில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படும், அப்பகுதியில் உரிய தடுப்பு அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, கீதாஜீவன் எம்.எல்.ஏ., கூறியதாவது, ‘மாநகராட்சியின் அலட்சியம் காரணமாகவே தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 3பேர் இந்த குளத்தில் மூழ்கி பலியாகி உள்ளனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். இந்தப்பகுதியினை பல ஆண்டுகளாக சலவைத்தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பூங்கா அமைக்கும் பணிகளை கைவிடவேண்டும்’ என்றார். இதில், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : victim ,pool ,
× RELATED கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி