×

சாத்தான்குளம்-நெல்லை இரவு நேர தனியார் பஸ் நிறுத்தம் பயணிகள் அவதி

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இதர ஊர்களுக்கு அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நெல்லையில் இருந்து பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக பெரியதாழைக்கு இரு வேளையும், இரவு நெல்லையில் இருந்து சாத்தான்குளத்துக்கும் தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இரவு 10மணிக்கு செல்லும் இரவு நேர பஸ்சாக இயங்கி வந்தது. நெல்லைக்கு செல்லும் கடைசி பஸ் என்பதால் பலர் சாத்தான்குளத்தில் இருந்து தொலைதூர ஊர்களுக்கு செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த பஸ்சை நம்பி பயணித்து வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையை யொட்டி நிறுத்தப்பட்ட இந்த பஸ் தற்போது சாத்தான்குளம் வரை மட்டும் காலை, மாலை என இருவேளை இயக்கப்பட்டு வருகிறது. பெரியதாழை செல்வதில்லை. இதனால் கிராமப்புற பகுதிகளுக்கு இந்த பஸ்சில் சென்று வந்தவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இரவு 10மணிக்கு நெல்லை செல்லும் வகையில் தற்போது வரை இயக்கப்படவில்லை. தற்போது அரசு பஸ் இரவு 9மணி வரை சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.

இதுவே நெல்லை செல்லும் இரவு நேர கடைசி பஸ்சாக உள்ளது. இதனால் வியாபாரிகள் அவசர கோலத்தில் வியாபாரத்தை முடித்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே நெல்லையில் இருந்து சாத்தான்குளம் வரை இயக்கப்பட்டு வரும் தனியார் பஸ்சை மீண்டும் பெரியதாழை வரை இயக்கிடவும், இரவு 10மணிக்கு சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு செல்லும் வகையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Satankulam-Nellai ,bus stop passengers ,
× RELATED விபத்தில் இறந்த தொழிலாளி...